கிரஹஸ்தாஸ்ரமத்தில் இருப்பவனுக்கு ப்ரதிமா பூஜையே விதிக்கப்பட்டிருக்கிறது. நீராடி புத்தாடை உடுத்தி நிர்மலமான மனதோடு பூஜைக்கு உட்கார வேண்டும். வெறும் தரையில் அமரக்கூடாது. மரத்தால் செய்யப்ப்பட்ட பலகையில் பட்டு வஸ்திரம் விரித்து அமரவேண்டும். மான்தோல் மிகவும் விசேஷமானது. நெற்றியில் திலகம் இட்டுக்கொள்வது மிகவும் அவசியமானது. கங்கையைதுதித்து மந்திர பூர்வமாக மூன்று தரம் ஆசமனம் செய்து பூஜையைத் தொடங்க வேண்டும். முறைப்படி சிவபெருமானை மந்திரங்களைச் சொல்லி லிங்கத்தில் ஆவாகனம் செய்து அர்க்கியம் முதலியன விட்டு, அத்தர்,பன்னீர், சந்தனம், முதலிய பரிமள த்ரவ்யன்களால் அபிஷேகிக்கவேண்டும்.பிறகு நீரால் அபிஷேகம் செய்து திலகம் இட்டு மலர்களை சமர்பிக்கவேண்டும். முக்கியமாக தாமரை, கொன்றை,அத்தி,மல்லிகை,ரோஜா, வில்வம், தர்பை,அறுகு,கருவூமத்தை,துளசி ஆகியவற்றால் மகேஸ்வரனை அர்ச்சிக்கவேண்டும்.தூபம் தீபம்,நைவேத்யம்,கற்பூர ஆரத்தி செய்து, பிரார்த்தனை முடிந்த பிறகு,பஞ்சாட்சரம் செய்து சிவச்தித்ரங்களைச் சொல்லி புஷ்பாஞ்சலி செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்.
எத்தனையோ பிறவிகளில் மானிடப்பிறவி என்பது அரிது.மானிடனாகப் பிறந்தவன் அவனவன் குலதிற்கேற்ப விதிக்கப்பட்ட கர்மாக்களை தவறாமல் கடைபிடிதுவரவேண்டும். ஆயிரம் கர்மாக்களைச்செய்வதைவிட தீர்த்த யாத்திரை விசேஷமாகச் சொல்லப்பட்டது. தவம் மேற்கொள்வது அதனினும் மேற்பட்டது.இன்னும் மேலானது தியானம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. த்யானத்தின் மூலம் ஒருவன் பரப்ரம்மத்தை தான் இதயத்திலே தரிசிக்கிறான். அவன் பரப்ப்ரம்மஸ்வரூபமாகவே ஆகி விடுகிறான்.
பரமானந்தத்தை உண்டு பண்ணுவதும், பரிசுத்தமானதும், அழிவு இல்லாததும்,நிஷ்களங்கமானதும்,சர்வபரிபூரனமாதுமான சிவலிங்கத்தை அவன் தன் மனதிலேயே காண்கிறான். சிவலிங்கம் இருவகைப்படும். ஸ்தூலமான கண்ணுக்கு புலப்படக்கூடியது 'பாஹ்யலிங்கம்' என்றும், ஞானக்கண்ணுக்கு புலப்படக்கூடியது 'அந்தரலிங்கம்' என்றும் கூருவர்.மேலும் ஞானிகளுக்கு 'விக்ரக' ஆராதனை தேவையில்லை.ஞானம் இல்லாதவனுக்கு விக்கிரக ஆராதனை அவசியமாகும். பக்தியோடு பூஜித்தால் தான் ஒருவன் தான் கோரிய பலனை அடைவான்.இல்லையேல் அவன் செய்யும் வழிபாடு வ்யர்த்தமாகும்.மேலும் , ஸ்ரத்தையின்றி பூஜை செய்வதால் அவன் கீழான நிலையையே அடைவான்.
இத்தகைய ஈசனின் மகிமைகளை அறிந்த தேவர்கள், அவர் அருள்கடாக்ஷம் தங்களுக்கு என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். தங்கள் விருப்பங்களை விஷ்ணுவிடம் கூறி, தங்களுக்கு சிவலிங்கங்கள் கிடைக்கச் செய்யுமாறு விஷ்ணுவை பிரார்த்தித்தனர். உடனே, விஷ்ணு தேவதச்சனை அழைத்து, "தேவதச்ச, சகல காரண பூதரான சிவபெருமானின் திருஅருட்ப்ரசாதம் என்றும் கிடைக்கும்படி அவரைத் தினமும் ஆராதித்து வர தேவர்களாகிய நாங்கள் விரும்புகிறோம். ஆகவே சிவலிங்கங்கள் செய்து அளிக்க வேண்டும்" என்றார். விசுவகர்மாவும் அவ்வாறே ஒவ்வொரு தேவர்க்கும் அவரவர் அந்தஸ்துக்கேற்ப 'சிவலிங்கங்கள்'செய்து அளித்தான்.