மணக்குள விநாயகர் |
அருள்மிகு மணக்குள விநாயகர்-4
புதுச்சேரி
திருமதி சாந்தா வரதராஜன்புதுவை மணக்குள விநாயகர் கோயில் வலப்புறச் சுவரில் கணபதியின் பல்வேறு வடிவங்கள் 'சுதை' உருவில் காணப்படுகின்றன.அவற்றுள் சில வடிவங்கள் தமிழ்நாட்டில் வேறெங்கும் காணவியலாது. அவை பின்வருமாறு : பார்வதியின் இடுப்பில் புத்திர கணபதி, ஆறுமுக கணபதி,மயில் வாகன கணபதி,விட்டுணுராச கணபதி, யோக கணபதி, துண்டி கணபதி,திருமணக்கோல சித்தி, புத்தி கணபதி, பார்வதி பூசை செய்யும் கணபதி, அதைப்போல சிவன் முருகன், நம்பியாண்டார் நம்பி, இராவணன் பூசை செய்யும் கணபதி, திரு உருவங்களும் உள்ளன. பிரகாரத்தில் தென்மேற்கு கோடியில் பால கணபதி கோயில் வெள்ளித்தகடு வேயப்பட்ட விமானத்துடன் காட்சியளிக்கிறது. இங்கு எழுந்தருளும் பால கணபதி நான்கு திருக்கரங்களையுடையவர். செங்கதிர் நிறத்துடன் குழந்தை திருமேனியுடையவர்.நான்கு கைகளில் மா, பலா,வாழை,கரும்பு இவற்றைத் தாங்கியவர்.இவரது துதிக்கையில் மோதகம் விளங்குகின்றது.
இதேபோன்று வடமேற்குக் கோடியில் பால சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது.விமானத்தில் வெள்ளிதகடு வேயப்பட்டுள்ளது.''இளமுருகன் ' எனப்படும் இவர் ஒரு திருமுகமும், இரண்டு கைகளும் உடையவராய் வலக்கையில் தாமரை மலர் ஏந்தி, இடக்கையைத் தம் இடுப்பில் வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இவரது திருவடிகளில் இளமைக்குரிய கிண்கிணிச் சதங்கைகள் காணப்படுகின்றன.
மேலும் சண்டிகேஸ்வரருக்கு சிறு கோயில் உள்ளது. மடப்பளியையடுது அலுவலக அறை உள்ளது. இதனைஅடுத்து உற்சவ மூர்த்திகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அம்மண்டபத்தில் சில கணபதி வடிவங்கள் காணப்படுகின்றன.அவற்றில் ஹரித்ரா கணபதி என்பவர் மஞ்சள் நிறமானவர்.நான்கு கைகளில் பாசம் ,அங்குசம் தந்தம்,மோதகம் இவற்றை தரித்திருப்பவர்.பக்தர்களுக்கு அபயமளிப்பவர் எனக் கூறப்படுகிறது.இவருடைய புருவம் வில்போல அமைந்திருப்பது சிறப்பு அம்சம்.நிறுத்த கணபதி அல்லது கூத்தாடும் கணபதி என்பவர் தனது கை விரல்களில் மோதிரம் அணிந்திருப்பவர்.ஆறு கரங்களையுடையவர்.பாசம்,அங்குசம்,அப்பம்,கோடரி,இவைகளைத் தரித்தவர்.
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments